Sunday, April 30, 2006

மே மாத திசைகளில்

மே மாத திசைகளில்

ஜனநாயகத்தின் தூண்கள்

பல இடையூறுகளுக்கிடையே இந்திய ஜனநாயகம் சரியான பாதையிலேயே பயணித்து வந்துள்ளது என்று விளக்கி, " இந்தியாவில் படித்தவர்களும் பெருகி, பொருளாதாரமும் பெருகும் பொழுது ஜனநாயக முறையில் பல மாற்றங்களும் ஏற்படவேச் செய்யும். அந்த மாற்றங்கள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.." என்று திடமாக நம்புகிறார் நியூஜெர்ஸியிலிருந்து தமிழ் சசி.

"ராமனோ, ராவணனோ ஆட்சி அமைக்கட்டும், நல்லதாக ஏதேனும் செய்தால் கை தட்டுவோம், கெட்டதாகச் செய்தால் சலித்துக்கொள்வோம். ஆனால், இவை எவையும் எங்களை பாதிக்காது என்று விளாம்பழத்துக்கும் ஓட்டுக்கும் உள்ள தொடர்புதான் அவர்களுக்கும், அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும் இருக்கும்." என்கிறார் பெங்களூரிலிருந்து எழுதும் மென்பொருளாளர் சொக்கன்.

அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள நமது கடமைகளையும் உரிமைகளையும் சுட்டிக்காட்டி நாட்டு நிலவரத்தை அலசுகிறார் திருச்சியிலிருந்து புஷ்பவனம், செயலாளர், தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு.

"அறிவாயுதமாகத் தோன்றிய இதழ்கள் நுகர் பொருட்களாக மாறிப்போயின...பத்திரிகைகள் இன்று அவற்றின் பாரம்பரியத்தைக் கொண்டோ, உள்ளடக்கத்தைக் கொண்டோ மதிக்கப்படுவதில்லை. வர்த்தக நிறுவனங்களைப் போல அவற்றின் விற்பனையைக் கொண்டு மதிக்கப்படுகின்றன." என்று மூத்த பத்திரிகையாளரும் திசைகளின் கௌரவ ஆசிரியருமான மாலன், டில்லியிலிருந்து எழுதுகிறார்.

இவர்களுடன் அண்டை அயல் பகுதியில், நேபாளத்தில் உருவாகியிருக்கும் பிரச்சனைகளின் பின்புலத்தை மதுரையிலிருந்து அலசுகிறார் ஜெகதீசன், முன்னாள் சிறப்பு அலுவலர், (OSD) இந்தியப் பிரதமர் அலுவலகம்.
லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இலங்கையில் அமைதி வேண்டும் என்ற தன் கருத்தை முன்வைக்கிறார். கொரிய மக்களின் அன்பை சிலாகிக்கிறார் கொரியாவிலிருந்து கண்ணன். ஆங்கில கதாசிரியர் ஓஹென்றியின் கதையின் மொழிபெயர்ப்பின் மூலம் அமெரிக்கர் ஒருவரின் குணாதிசியத்தை படம் பிடித்து நமக்குத் தருகிறார், பவித்ரா ஸ்ரீனிவாசன், சென்னை.

கவிதைகள் பகுதியை அலங்கரிப்பவர்கள், அருள் முருகன், கீதா,
அரவிந்தன், பன்னீர்செல்வம், மற்றும் சேவியர்.

வாழ்க்கை பகுதியில் இசைக்கலைஞர் ஓ.எஸ். அருணிடம் நேர்காணல் செய்கிறார், சென்னையில் மதுமிதா. சிறுகதைகளை அளிப்பவர்கள் சந்திரசேகர், சரவணன், மற்றும் கவிநயா. புதுமைப்பித்தன் வரலாறு புத்தகத்தை, புத்தகங்கள் பகுதியில் பரிந்துரைப்பவர் சுப்பிரபாரதி மணியன்.


திசைகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி வாசகர்களும், எழுத்தாளர்களும் கலந்துரையாட, இங்கே இந்த வலைப்பதிவில் கீழே கருத்துப் பெட்டியில் உங்கள் கருத்துக்களை பதியலாம்.

சரி. இப்போது கோடை வெய்யில் தகிக்கிறதே.....? அதனால் என்ன? கிளம்புங்கள் ஒரு நல்ல புகைப்படக் கருவியை எடுத்துக்கொண்டு - இஷ்டம்போல் பயணியுங்கள். அப்படியே திசைகளுக்கும் போட்டோக்களுடன் ஒரு பயணக் கட்டுரை எழுதி அனுப்பி விடுங்கள் !

ஆமாம்... அடுத்து வரும் ஜூன் இதழின் சிறப்புப் பகுதி - " பயணம்". ஏற்கனவே சென்றிரூந்த இடங்கள் பற்றியும் எழுதுங்கள். வயதில் மூத்த வாசகர்கள் "அந்தக் கால" பயண அனுபங்களையும் எழுதலாமே? மூன்று நாள் ரயில் பயணம் / கூஜாவில் தண்ணீர் / என்று ஏகமாக பழைய பிரயாண அனுபங்கள் இருக்கலாம். பயணம் சம்பந்தமான அனைத்துக் குறிப்புகளும் / யோசனைகளும் வரவேற்கப்படுகிறது.

அன்புடன்

அருணா ஸ்ரீனிவாசன்

3 Comments:

Blogger Unknown said...

Jegadeesan's article about nepal is very informative.The dilemma for india is How to reconcile the democratic aspirations of VILLAGE nepal represented by maoists,Urban middleclass represented by the sevenparty alliance,feudalism represented by vishnu avtar the King,nepalese army allied to king and getting arms especially tanks from china.China has openly condemned the maoists for calling themselves thus and sided with the king.The villagers have already tasted power of blackmailing the old ruling upper castes and living without paying any taxes to the burecaracy.The real trick for India is to make the present 3 month ceasefire declared by maoists to continue and declare its own ceasefire by the RNA and Abjure VIOLENCE BY maoists.But the tricky King supported by china/Pakistan will not allow this.Karansingh is not a honest broker.Will Yechury succeed?

11:54 PM  
Anonymous Anonymous said...

Dear Sirs,

Please covey our congradulations to Mr. A.Jagadesan for his article
"THAMILNATTU THEIRTHAL VANNATHIRAI" ( தமிழ்நாட்டு தேர்தல் வண்ணத்திரை) in your April Editon for predicting so clearly the poll verdit of Tamilnadu. His conclusion
"முதல் முறையாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வரும். கருணாநிதி இருக்கும் வரையில் அவ்வளவாக பிரச்சனை இராது. ஆனால் அவருக்கு பின் கூட்டணியில் பெரிய பிரளயமே காத்திருக்கிறது"
is the order of the day.
Radhakrishnan.K

10:55 AM  
Anonymous Anonymous said...

அப்பா சிறு கதை படிக்க நன்றாக இருந்தாலும், முடிவு அவ்வளவு நன்றாக இல்லை. மனக்கஷ்டத்தில் வாழ்பவர்களுக்கு இது ஒரு விருந்து போல் இருந்திருக்கலாம். இம்மாதிரியான கதைகள் மூலம், நாம் மென்மெலும் தற்கொலையை ஆத்ரிக்கவே செய்கிறோம். மேலும் அப்பா ஒரு பொம்மை ஆக்கப்ப்ட்டு இருக்கிறார். மனிதன் எவனாக இருந்தாலும், அவனது ஆத்மா இவ்வுலகில் உள்ள எல்லாவற்றிற்கும் உயர்ந்தது. ஒரு சாதாரண வேலைக்கு, வீட்டில் பெற்றவ்ர்களின் ஏமாற்றத்திற்கு சவால் கொடுத்து, சமாளித்து மீண்டு வர முடியாமல், தன் உயிரை மாய்த்து கொள்ள்வதில்தான் அதற்கு பதில் இருக்கிறது என்பது போன்று சித்தரித்திருப்பது ஏனோ?

Masilamani

11:22 PM  

Post a Comment

<< Home

Wednesday, April 05, 2006

திமுகவின் தனி ஆட்சிக்கு வாய்ப்பில்லை

தமிழ் சசி என்னுடைய பதிவிலிட்ட பின்னூட்டத்திலும், அவரது பதிவிலும், திமுக கூட்டணி வெற்றி பெறும் என அவர் கருதுவதின் அடிப்படையாக சில கணக்குகளையும், வாதங்களையும் தந்துள்ளார்.

அவற்றில் ஒன்று:

"ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் Vote swing, 2004 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. சுமார் 22.56% வாக்குகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இடம்மாறின. இது தான் தமிழகமெங்கும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தது..... திமுக இந்த தேர்தலில் தோல்வியடைய வேண்டுமானால் தன்னுடைய கூட்டணி ஓட்டுக்களில் திமுக 23% முதல் 24% இழக்க வேண்டும்."

இது குறித்து யோசிக்க்கும் போது சில கேள்விகள் எழுகின்றன.

அ. 22.56% வாக்குகள் இடம் மாறின என்பதன் அடிப்படை என்ன?
2001ல் அதிமுக பெற்ற வாக்குகள், 2004ல் அதிமுக பெற்ற வாக்குகள் இவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தைத்தான் 'இடம் மாறின' என்று சசி குறிப்பிடுகிறார் என்றால் அவர் கீழ்க்காணும் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.2004ல் அதிமுகவிற்கு எதிரான அலை இருந்தது. இன்று இல்லை.
2.2004ல் திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் 2001ல் அதிமுக கூட்டணியில் இருந்தன. எனவே 2001ல் அதிமுக பெற்ற வாக்குகளில் கூட்டணிக் கட்சியினர் பெற்ற வாக்குகளும் அடங்கும்.

எனவே இடம் மாறிய வாக்குகளை துல்லியமாகக் கணக்கிட முடியாது.

ஆ.2001ல் அதிமுகவுடன் இருந்த கட்சிகள் இன்று திமுகவுடன் இருக்கின்றன.அதனால் அநதக் கட்சிகளின் பலம் திமுகவிற்கு சேரும்தானே? என்று கேட்டால், ஆம், சேரும், ஆனால் எவ்வளவு சேரும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ம.க. அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போது அதிமுக பெற்ற வாக்குகள் 25.89%. அதே 2001 தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்தான் பாமக இருந்தது. அப்போது அதிமுக பெற்ற வாக்குகள் 31.44 சதவீதம். இதைக் கொண்டு அதிமுகவிற்குக் கூட்டணியால் கிடைத்த பலன், கூடுதலாக ஆறு சத்வீத வாக்குகள் என்று சொல்லிவிட முடியுமா? முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட போது, அதற்கு எதிரான அலை வீசிய காலகட்டத்தில் கூட அது பெற்ற வாக்குகள் 29.77 சதவீதம். அதாவது கூட்டணி இல்லாத போதும், எதிராக அலை வீசிய போதும் அதிமுக 2004ல், இழந்தது சுமார் 1.5 சதவீத வாக்குகளைத்தான்.

இ. உண்மையில் தமிழ் நாட்டில் swingஐ சரியாகக் கணக்கிட முடியாது. ஏனென்றால் அலைகள் இல்லாத தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் swingகள்தான் ஓரளவிற்கு சரியான கணிப்பைக் கொடுக்கும். ஆனால் த்மிழ்நாட்டில்,1998, 2001 தேர்தலைத் தவிர அண்மைக்காலங்களில் அலை இல்லாத தேர்தலே இல்லை.
1991 ராஜீவ் படுகொலை அலை, 1996 ஜெயலலிதா எதிர்ப்பு அலை,1999 வாஜ்பாய் அனுதாப அலை, 2004 ஜெயலலிதா எதிர்ப்பு அலை.
ஈ. கட்சிகளின் பலத்தைக் கொண்டு கணக்கிடும் IOU (index of opposition unity) முறையும் பலன் தராது. ஏனெனில் கட்சிகள் அணிமாறிக் கொண்டே இருக்கின்றன.

எனவே swing, IOU ஆகியவற்றைக் கொண்ட கணக்குகள் சரியாக வராது.

உ:" ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தன்னுடைய 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகளை விலக்கி கொண்டார். இதனால் அரசு ஊழியர்கள் மனம் மகிழ்ந்து இந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஓட்டுப்போடுவார்கள் என்று ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஞாபகமிருக்கும் அளவுக்கு அவர் திரும்பி வழங்கிய சலுகைகள் ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை. சிறுபான்மையினருக்கு அவரது மதமாற்றச் சட்டம் தான் ஞாபகத்தில் இருக்கும்"
இது சசியின் ஊகம். ஆனால் திமுக பேச்சாளர்கள் கூட்டத்தில், அவர்கள் வியூகம் எப்படி இருக்க வேண்டும் என கருணாநிதி பேசியது இது: "2004 தேர்தலின் போது நாம் எடுத்துச் சொல்லாமலே மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் பற்றி ஒரு கருத்து இருந்தது. ஆனால் இப்போது நாம் அவர்களுக்கு அரசின் தவறுகளை ஞாபகப்படுத்த வேண்டும். அதன் கொடுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்"

இதுதான் இன்றுள்ள யதார்த்தம்.

2004 தேர்தலுக்குப் பின் வேறு சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன:

1. தயாநிதி, அன்புமணி, வாசன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது. இது இந்தக் கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன என்ற எண்ணத்தைப் பரவலாகவும், கட்சிக்காரர்களிடத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது.

2.வைகோவின் விலகல்- பிரசாரம்.

3.விஜயகாந்தின் பிரவேசம்

4.அதிமுகவிற்குக் கிடைத்திருக்கும் ஊடக ஆதரவு
6.கருணாநிதியின் உடல்நிலை, வயது. அடுத்த முதல்வர் கருணாநிதியா, ஸ்டாலினா என்ற கேள்வி முன் வைக்கப்படுமானால் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக இராது.

7.திமுகவின் Strategyயில் உள்ள குறைபாடு. அது 130 இடங்களில் போட்டியிடுகிறது. தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.அதாவது அது போட்டியிடும் இடங்களில் 90 சதவீத இடங்களை வெல்ல வேண்டும். அலை இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த 130 இடங்களில் 25 சதவீதம் தென்மாவட்டங்களில் இருக்கின்றன என்பதயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதுவும் தவிர இந்த 130ல், 106 இடங்களில் அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது திமுக தனித்து ஆட்சி அமைப்பது என்பது எளிதல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.
*

2 Comments:

Blogger ஜெ. ராம்கி said...

//அலைகள் இல்லாத தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் swingகள்தான் ஓரளவிற்கு சரியான கணிப்பைக் கொடுக்கும். ஆனால் த்மிழ்நாட்டில்,1998, 2001 தேர்தலைத் தவிர அண்மைக்காலங்களில் அலை இல்லாத தேர்தலே இல்லை.//

In 1998 itself, there was a wave against ruling party especially after Coimbatore Bomb-blast.Hence, we can take it account only two elections ie 1989 & 2001 in the last 25 years of politics

1:51 AM  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

(1) தி.மு.கழகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து கலைஞர் முதல்வரானாலும், தனிப்பெருங்கட்சியாக அ.தி.மு.க. உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அம்மாதிரியான சூழலில், காங்கிரஸின் கரமும் ஓங்கும், பாமகவின் பிடியும் இறுகும்.

(2) அதேபோல, தொங்கு சட்டசபை உருவாகும் சூழலில், அ.தி.மு.க. தனிப்பெருங்கட்சியாக வந்தால், பாமகவும், காங்கிரஸும் தீர்மானிக்கும் சக்திகாளாக (அதாவது, இடப்பெயர்ச்சிக்குத் தாயாராக) உருவெடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேற்சொன்ன (1) மற்றும் (2) போல நடந்தால், காலப்போக்கில், நல்லதோ, கெட்டதோ, கூட்டணியாட்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல சிறு கட்சிகளின் மவுசு பெரியகட்சிகளிடத்தே அதிகரிக்கும்.

11:18 AM  

Post a Comment

<< Home

Sunday, April 02, 2006

தேவை கூட்டணி அரசு - மாலன்

வரும் தேர்தலில் நாம் எதைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முதலில் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அது நமது அரசியல் அமைப்பைப் (Polity) புரிந்து கொள்ள உதவும்

பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, நிர்வாக அணுகுமுறை இவற்றில் காங்கிரசிற்கும் பா.ஜ.கவிற்கும் இடையே பெரும் வேறுபாடுகள் கிடையாது. ஆனால் அவை என்றேனும் கூட்டணி வைத்துக் கொண்டு ஒரே அணியாக தேர்தலை சந்திக்குமா?

காங்கிரஸ் தன்னோடு பொருளாதாரக் கொள்கைகளில் பெரிதும் முரண்பாடு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளோடு உடன்பாடு கொண்டு தேர்தலை சந்திக்குமே தவிர பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த நோக்குக் கொண்ட பாரதிய ஜனதாவோடு உடன்பாடு கொள்ளாது. அது ஏன்?

இட ஒதுக்கீடு, மாநில உரிமைகள், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இவற்றில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கொள்கை ரீதியாக பெரும் கருத்து வேறுபாடுகள் இல்லை.(அணுகு முறையில் வித்தியாசம் இருக்கிறது) அவை ஓரணியில் நின்று தேர்தலை சந்திக்குமா?

அதிமுகவும், திமுகவும் தங்கள் கொள்கைகளோடு முற்றிலும் முரண்பட்ட பாரதிய ஜனதாவோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு செயல்படுமே தவிர இரண்டு திராவிடக் கட்சிகளும் இணைந்து செயல்படாது. அது ஏன்?

ஏன் இவை சாத்தியமாகவில்லை என்றால் நம்முடைய ஆட்சி முறை (governance) சித்தாந்தம் சார்ந்தது அல்ல. அதிகாரம் சார்ந்தது. எனவே இங்கே கட்சிகளுக்கு சித்தாந்தத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்றினால் போதும். பெரிய கட்சிகள் தங்களைப் போன்ற இன்னொரு பெரிய கட்சியை அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் போட்டியாளாராகக் கருதுகிறார்களே தவிர கருத்தொற்றுமை கொண்டவர்களாகக் கருதுவது இல்லை. கருத இயலாது என்பதுதான் நிதர்சனம்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் எந்தக் கட்சிக்கும் நம் நாட்டில் தனியொருவராக ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு வலு இல்லை. இந்திய விடுதலைக்குப் பிந்திய ஆரம்ப நாள்கள், திராவிட இயக்கத்தின் வேகம் கொண்ட 1950-60கள், எமெர்ஜென்சிக்கு முந்திய இடதுசாரி இயக்கத்தின் 'பொற்காலங்கள்' இவற்றோடு ஒப்பிட்டால், கட்சியில் உறுப்பினராக இல்லாத ஆனால் கட்சிகளின் மீது விசுவாசம் கொண்ட, வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தும், நடுநிலை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.கண்ணை மூடிக் கொண்டு ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் மனோபாவம் மாறிவருகிறது. இதற்கு, கட்சிகளிடையே ஏற்பட்ட சித்தாந்த வெறுமை, ஒரு தலைவரை மட்டுமே சார்ந்து கட்சயை வளர்க்கும் அணுகுமுறை காரணமாக, அந்தத் தலைவர் மறையும் போது ஏற்படும் வெற்றிடம், வாக்காளர்களின் கல்வி வளர்ச்சி, ஊடகங்களின் செயல்பாடுகள், அரை நூற்றாண்டுக்கும் மேலான ஜனநாயக அனுபவம், கட்சி சார்ந்த அரசியலில் ஈடுபாடு இல்லாத இளையதலைமுறை எனப் பல காரணங்கள் உண்டு.

இதனால் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் தனியாக ஆட்சியைப் பிடிக்கும் வலு இல்லை. உயர்ந்து நிற்கும் மரத்தில் கையை நீட்டிக் கனி பறிக்க முடியாமல் போனால், ஒரு கழியின் முனையில் சிறு அரிவாளைக் கட்டிக் கொண்டு பறிக்க முயல்வது போல, இந்தப் பெரிய கட்சிகளுக்கு ஆட்சிக் கனியைப் பறிக்கக் கூடுதலாக ஓர் சாதனம் தேவைப்படுகிறது. அந்த சாதனம்தான் தன்வசம் சிறிய வாக்கு வங்கியைக் கொண்ட சிறு கட்சிகள்.

இந்தச் சூழலில் சிறிய கட்சிகளின் நிலை என்ன? பெரிய கட்சிகளின் தேவையை அவை நிறைவு செய்ய இணங்குகின்றன. ஏனெனில் அதனால் அவற்றிற்கு நட்டம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இந்த சிறிய கட்சிகளால் ஒரு போதும் தனியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது. திமுகவோ, அதிமுகவோ என்றாவது தங்களது தனி பலத்தினால் மட்டும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியுமா? எனவே கூட்டணியில் ஒரு junior partner ஆகப் பங்கேற்பதில் நமக்கு நட்டம் இல்லை என்று சிறிய கட்சிகள் கருதுகின்றன. நட்டமில்லை சரி. லாபமுண்டா? நடுநிலை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, கட்சி விசுவாச வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் காலகட்டத்தில், தங்களது வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ளும் கட்டாயம் அவற்றிற்கு இருக்கின்றன. அதற்கு ஒரே வழி கூட்டணியில் பேரம் பேசி அதிக பட்ச இடங்களைப் பெறுவதுதான். அதன் மூலம் தங்கள் விசுவாசிகளுக்கு அவை உதவ முடியும்.

ஆனால் ஒரே கட்சியோடு தொடர்ந்து உற்வைப் பேணிவந்தால் சிறு கட்சிகள் நாளடைவில் சிறுக சிறுகத் தேய்ந்து பின் காணாமல் போகும். முஸ்ளீம் லீக் இதற்கு ஒர் உதாரணம். காயிதே மில்லத காலத்தில் தமிழக முஸ்லீம் சமுதாயத்தின் அபிமானத்தைக் கணிசமாகப் பெற்றிருந்த முஸ்லீம் கட்சி இன்று தனது அடையாளத்தை இழந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலையில் இருக்கிறது. சிறிய கட்சிகள் ஒரே கூடடணியில் தொடர்ந்தால், அவற்றின் மீது 'எல்லாம் நம்ப சொன்னாக் கேட்டுப்பாங்கப்பா' என்ற Take it for granted மனோபாவம் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுவிடும்.

கட்சிகளின் அவசியம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் தார்மீக ரீதியில் சரியா?

சித்தாந்ததைக் காப்பாற்றும் அரசியல் என்பது போய் அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் என்ற நிலை ஏற்பட்ட போதே தார்மீகக் கேள்விகளுக்கு இடம் இல்லாது போய்விட்டது. நமது ஐம்பதாண்டு குடியரசில், நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எதிர்மறை அரசியலை, அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், ஊடகங்கள், கடைப்பிடித்து வருகின்றன. யார் வேண்டும் என்பதற்குப் பதில் யார் வேண்டாம் என முடிவு செய்வதை நம் தேர்தல்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக 1967ல் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டார் ராஜாஜி.அதே ராஜாஜி, 1971ல் இந்திராவை அகற்ற வேண்டும் என்பதற்காக 1967ல் தான் எதிர்த்த காமராஜரோடு உறவு ஏற்படுத்திக் கொண்டார்.1967ல் திமுக அணியில் இருந்த இடதுசாரிகள், பின்னால் திமுகவை அகற்றுவதற்காக எம்ஜிஆரோடு தோழமை கொண்டார்கள். பின்னர் அதிமுகவை அகற்றுவதற்காக எந்தத் திமுகவை அகற்றுவதற்கு முயன்றார்களோ அதே திமுகவோடு உறவு கொண்டார்கள். காங்கிரஸ் ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக பாரதிய ஜனதாவோடு உறவு கொண்ட திமுக பின் பாஜகவை அகற்றுவதற்காக காங்கிரசோடு 2006ல் தோழமை பூண்டது.1991ல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக அதிமுகவோடு கூட்டணி கண்டது காங்கிரஸ். 1996ல் அதிமுகவை அகற்றுவதற்காக, தமாக வடிவில் அது திமுகவோடு உறவு கொண்டது.இன்று திமுக கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் கடந்த தேர்தலில் அதைப் பதவியிலிருந்து அகற்ற அதிமுகவோடு கூட்டணி கண்டவர்கள்தானே?

பதவியைக் காப்பாற்றிக் கொள்ள கட்சித் தாவல், அதிகாரத்தைக் கைப்பற்ற கொள்கை முரண்பாடு கொண்டவர்களோடு கூட்டு என்பதெல்லாம் ராஜாஜி துவங்கி வைத்த அரசியல் கலாசாரம். ஒரு புறம் அவரை சாணக்கியராகக் கொண்டாடிக் கொண்டு மறுபுறம் அரசியலில் தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று வருந்துவது, இரட்டை வேடம். நாம் வருந்த வேண்டியதெல்லாம் எதிர்மறை அரசியலுக்காக; அரசியலில் ஏற்பட்டுள்ள சித்தாந்த வெறுமைக்காக.

வெறுமனே வருந்திக் கொண்டிருப்பதைவிட, வாக்காளர்களாகிய நாம் நடைமுறை சாத்தியமாக என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். அரசியல் கட்சிகள் தங்கள் நலன்களைப் பேண முயற்சிக்கும் போது நாம் நம் நலனை, அதாவது சமூகத்திற்கான பொது நலனைக் கருத்தில் கொண்டு வாக்களிக்கலாம்.

இன்று மக்களுக்கு எந்த ஆட்சி நல்லது? எந்த ஒரு தனிக் கட்சியின் ஆட்சியும் அல்ல. கூட்டணி ஆட்சிதான்.

எப்படி?

கூட்டணி ஆட்சி என்பது ஒரு தனிநபரின் ஆட்சி அல்ல. ஒரு தனிநபர் ஆட்சி என்பது அவரைச் சார்ந்து ஒரு வழிபாட்டு மனோபாவத்தை (cult) உருவாக்கவே உதவி வந்திருக்கிறது. அந்த மனோபாவம் தலைவர்கள் தவறிழைக்கும் போது தட்டிக் கேட்க முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது. எஜமான்கள் சார்ந்த நிலவுடமைச் சமுதாயத்தின் நிலைக்கு ஜனநாயகத்தைப் பின்னோக்கி எடுத்துச் சென்று விடுகிறது.

இன்றுள்ள தலைவர்கள் கட்சியையும் அரசாங்கத்தையும் தாங்கள் முதலீடு செய்து வளர்த்த ஒரு தனியார் கம்பெனியைப் போல தலைமைப் பதவியை வாரிசுகளுக்குரியதாக ஆக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியின் பேரனும். ராமதாசின் மகனும், மூப்பனாரின் மகனும், தத்தம் கட்சிகளுக்கு செய்த பங்களிப்புகள் என்ன? தத்தம் கட்சிகளின் வளர்ச்சிக்கு அளித்த உழைப்பு என்ன? கட்சியில் அவர்களை விட அதிக காலம் உழைத்தவர்களை விட இவர்களுக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தங்களுக்காக அல்ல, அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகத்தான் கட்சி என்ற நிலையிலிருந்து, அந்த அதிகாரம் தங்கள் குடும்பத்தின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு அரசியல் கட்சிகளின் நடத்தை மாறிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் மிருகபலத்துடன் கூடிய ஒரு கட்சி என்ற நிலையை மக்கள் மாற்ற வேண்டும்.

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. கருணாநிதிதான் என்பது பரவலாக உள்ள எண்ணம். ஆனால் கூட்டணிக் கட்சிக் கூட்டங்களுக்கும், மாநாட்டு மேடைக்கும் அவர் வரும் போது யாராவது இரண்டு பேரின் தோளைப் பிடித்துக் கொண்டுதான் நடக்க முடிகிறது என்பதைத் தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. வயோதிகத்தின் சுமை அவர் மீது அழுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலை, பொதுவாக வயோதிகர்களை மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தி விடும். பலர் அந்த நிலையில், தங்களைச் சுற்றியிருப்பவர்களை மீறி ஏதும் செய்ய இயலாத சூழ்நிலைக் கைதியாக மாறிப் போனதையும் வரலாறு கண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் பல துறைகளில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதாவது இன்று வளர்ச்சியின் வாயிலில் (Threshhold of development) நிற்கிறது. தொடர்ந்து முயன்றால் அது இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக ஆகிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எனவே வளர்ச்சியைப் பொறுத்தவரை வரும் ஐந்தாண்டுகள் மிக முக்கியமானவை (crucial years for development). இந்த நிலையில் ஆட்சிக்கு ஒரு துடிப்பான ஒரு தலைமை தேவை. அதற்குக் கருணாநிதியின் வயது இடம் கொடுக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. சிறிது காலத்திற்குப் பிறகு கருணாநிதி இளைய தலைமுறைக்கு வழிவிட்டு, ஸ்டாலினை முதல்வராக ஆக்கிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம். அந்த நிலையிலும் கூட, பெரிய நிர்வாக அனுபவம் இல்லாத ஸ்டாலின் ஏதும் பெருந்தவறு செய்துவிடாதிருக்கவும், நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் போது (crisis management) சரியான முடிவுகள் எடுக்கவும், ஓரு கூட்டுத் தலைமை-அதாவது கூட்டணி ஆட்சி- உதவும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் கூட, 2001-04 ஆண்டுகளில் ஜெயலலிதா எடுத்த தீவிரத்தன்மை கொண்ட முடிவுகளைப் போன்ற முடிவுகளை எடுக்கவிடாமல் தடுத்து நிற்கும் ஒரு தடைக்கல்லாகவும் கூட்டணி ஆட்சி அமையும்.இன்று ஆளும் கட்சி அறிவித்துள்ள சலுகைகள் தேர்தலை மனதில் கொண்டு அளித்துள்ள சலுகைகளோ, அவை தேர்தலுக்குப் பின் திரும்பப் பெறப்பட்டுவிடுமோ, என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. அவை திரும்பப் பெறப்படாமல் காக்கவும் கூட்டணி ஆட்சி தேவை.

ஆளுங்கட்சியை மட்டுமல்ல, மற்ற கட்சிகளையும் கூடக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய சூழல் இன்றிருக்கிறது. ரஜனிகாந்திற்கும் தனக்கும் உள்ள தனிப்பட்ட விரோதத்தை அரசியல் பிரசினையாக்க பாபா பட வெளியீட்டின் போது முயன்றது பா.ம.க. பின்னர், தங்கர் பச்சனுக்கும், குஷ்புவிற்கும் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட மனத் தாங்கலை, ஒரு கலாச்சாரப் பிரசினையாகத் திரிக்கவும் அது முற்பட்டது. சில நுண் அரசியல் தேவைகளுக்காகப் பொது அரசியல் அரங்கை, தன் அரசியல் பலத்தை அது பயன்படுத்திக் கொள்ள முயல்வதை நாம் அண்மைக்காலமாகப் பார்த்து வருகிறோம். அதே நேரம் கூட்டணிக்குள் செயல்படும் போது அதன் நிலை ஒரு நிதானத்திற்குள் இருப்பதையும் பார்க்கிறோம். தொழிற்கல்விகளுக்கான பொதுத் தேர்வு, மருத்துவப் படிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் அனைத்திந்திய மருத்துவக் கவுன்சிலின் நிலைபாடு காரணமாக உருவானது. இந்திய மருத்துவ அமைச்சகம் பாமகவின் வசம் இருந்தும் கூட, அதனால் இந்த நிலைபாட்டை மாற்ற இயலவில்லை. புகைபிடிப்பதைத் திரைப்படங்களில் தடை செய்யும் டாக்டர் அன்புமணியின் விருப்பத்திற்குத் தகவல் ஒலிபரப்புத் துறையின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. ஈழப்பிரசினையில் மதிமுக கொண்டுள்ள நிலை எதுவாயினும், விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் வந்த போது, பா.ஜ.க. கூட்டணியில் இருந்த மதிமுகவால் அதற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்க முடியவில்லை. Moderation என்னும் நிதானப் போக்கை அரசியல் கட்சிகள் மீது திணிக்க கூட்டணி ஆட்சி என்பது உதவும்.

மன்மோகன் சிங் போல 'முழு அரசியல்வாதி'யாக இல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்பிற்கு வரும் சாத்தியத்தையும் கூட்டணி ஆட்சி அளிக்கும். அப்படி ஒரு தலைவரை இன்று தமிழக அரசியல் அரங்கில் தொடுவானம் வரைத் தேடிப்பார்த்தாலும் காணமுடியவில்லை என்றாலும், வருங்காலத்தில் அதற்கான வாய்ப்புக்களை உருவாக்க கூட்டணி ஆட்சி உதவலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங் முதல்வராவார் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? வளர்ச்சியை நோக்கிப் போக வேண்டிய ஒரு தருணத்தில் இது போன்ற அரசியல்வாதிகளாக இல்லாத தலைவர்கள் வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த பின் அமைந்த முதல் அமைச்சரவையில் ஷியாம் பிரசாத் முகர்ஜி, சர்.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், பி.ஆர்.அம்பேத்கர், போன்ற காங்கிரஸ் கட்சியைச் சாராதவர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பதையும், பின்னாளில் கூட, மக்கள் தொகை நிபுணர் டாக்டர் சந்திரகேகர், நீர் வள வல்லுநர் டாக்டர் கே.எல்.ராவ் போன்றவர்கள் தங்கள் துறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் வளர்ச்சிப்பருவத்தில் இது போன்ற சூழல் அவசியமானது என்பதியும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்

கூட்டணி ஆட்சியின் இன்னொரு முக்கியமான அம்சம் குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டம்.இது பல சர்ச்சைக்குரிய அம்சங்களில் ஆட்சியின் நிலைபாடு என்பது என்ன என்பதை ஆட்சி துவங்கும் முன்னரே தெளிவுபடுத்தும். ஆட்சியின் செயல்பாட்டை அளவிட ஓர் அளவுகோலாகவும் பயன்படும். தனிக் கட்சி ஆட்சியில் இதற்கான வாய்ப்பு இல்லை. அவை தேர்தல் அறிக்கைகள் வெளியிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை பெரும்பாலும் அதற்கு முந்திய தேர்தலின் போது வெளியிடப்பட்டவையின் நகல்களே. வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த முடியாமல் போனதற்கும், இப்போதுள்ள மன்மோகன் ஆட்சி, அது விரும்பிய வேகத்தில் பொதுத் துறையை தனியார்மயமாக்க முடியாததற்கும் குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டம்தான் முக்கிய காரணம்.

நம் தேர்தல் முறை விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதனால் பல சிறு கட்சிகள்,சமூகங்கள் இவற்றின் குரல்கள் அதிகார மையங்களை எட்டுவதே இல்லை. எட்டினாலும் பொருட்படுத்தப்படுவதே இல்லை. கக்கனுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக, எந்த தலித்தாவது, அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகித்ததுண்டா? விகிதாசரப் பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி ஒரு மாற்று.

எனவே இந்த முறை வாக்களிக்கும் போது எந்தக் கட்சியும் மிருகபலம் பெற்று ஆட்சியில் அமர்வது போல வாக்களிக்காதீர்கள். அது உங்களை நீங்களே தோற்கடித்துக் கொள்வதாகும். கூட்டணி ஆட்சியை அரசியல் கட்சிகள் மீது நிர்பந்தியுங்கள்.

புதிய கதவுகள் விரியத் திறக்கட்டும்

*
இது திசைகள் ஏப்ரல் இதழில்வெளியாகியுள்ள கட்டுரை. இது போன்ற பல செறிவான கட்டுரைகளைத் தாங்கி ஏப்ரல் இதழ் வெளிவந்துள்ளது.(www.thisaigal.com) வாசகர்களும் விவாதிக்கலாம்.-திசைகள்

18 Comments:

Blogger தமிழ் சசி | Tamil SASI said...

உங்களது இந்தக் கட்டுரை குறித்த என் எண்ணங்களை இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன்

http://thamizhsasi.blogspot.com/2006/04/blog-post.html

8:54 PM  
Blogger siva gnanamji(#18100882083107547329) said...

mr malan, are you against the fiscal measures implemented by jj
during the first half of her tenure in office?(leave alone the kachada issues)

8:56 PM  
Anonymous Anonymous said...

I have never seen such a balanced article in any form of reviews..

Food for thought for the TN Electorate......

10:18 PM  
Blogger rajkumar said...

மிகவும் நேர்த்தியான கட்டுரை.புதிய விவாதங்களை எழுப்பக் கூடிய சிந்தனையை முன்வைத்துள்ளது.

10:20 PM  
Anonymous Anonymous said...

சரியாகச்சொன்னீர்கள் அய்யா,

கொள்கையெல்லாம் ஒன்றுதான், மக்களை ஏமாற்றும் விதத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம்.

//நடுநிலை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.கண்ணை மூடிக் கொண்டு ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் மனோபாவம் மாறிவருகிறது.//

கண்ணைத்திறந்து கொண்டு வாக்களித்தாலும் மாற்றம் ஏற்படப்போவதில்லை. இரண்டில் ஒன்றுதான் வேறு வழியில்லை. தேர்தல் முறையைமாற்ற வேண்டும்.

10:24 PM  
Blogger பட்டணத்து ராசா said...

பங்குக்கொள்ளும் சிறுக்கட்சிகளின் அடிப்படை கட்டமைப்பு சாதி. அக்கட்சிகள் இல்லை என்று பம்மாத்து பண்ணினாலும் அவர்களின் ஒட்டு வங்கி அந்த சாதிகளை நம்பிதான் என்பது நிதர்சனம். இதை அதரிப்பதின் முலம் படிபடியாக எல்லா சாதிகளும் அரசியல் கட்சியாகும்.

கூட்டனிக் ஆட்சியின் சலுகைகள் அக்கட்சிகளின் எண்ணிக்கை பொருத்துதான் உதாரணம் மத்தியில் ஆளும் கூட்டனி அரசின் சலுகைகள் எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு மற்றும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை பார்தால் தெரியும்.

அப்படிப் பார்தால் சித்தாந்தக் கழக கட்சிகளின் அளுமை போய் சாதிகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் அதிகாரம் செல்லுவது நல்லதா ?

10:48 PM  
Anonymous Anonymous said...

//அதிமுகவும், திமுகவும் தங்கள் கொள்கைகளோடு முற்றிலும் முரண்பட்ட பாரதிய ஜனதாவோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு செயல்படுமே தவிர இரண்டு திராவிடக் கட்சிகளும் இணைந்து செயல்படாது. அது ஏன்?//

ஏன்னா, ஒரே கத்தியில் இரண்டு உறைகள் இருக்க முடியாது..??|\|\$^%^%\ இல்லீங்க ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது.

1:02 AM  
Anonymous Anonymous said...

மாலன்,

உண்மையிலேயே மிக நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.

கூட்டணி ஆட்சியால் விளையும்/விளையப்போகும் நன்மைகள் என நீங்கள் தெரிவித்த கருத்துக்களுடன் நான் உடன்பட்டாலும், கூட்டணி ஆட்சியின் மறுபக்கத்தை நீங்கள் பிரதிபலிக்கவில்லை என்பதே என் கருத்து. சமீபத்தில் கர்நாடகவில் நடந்த மிகப்பெரிய குழப்பம், சில ஆண்டுகளுக்கு முன் உ.பியில் நடந்த கூட்டணி குழப்பம் என கூட்டணி ஆட்சியால் ஒரு ஆளுங்கட்சிக்கு மிக அதிகமான தடைகளே ஏற்படும்.

// பெரிய நிர்வாக அனுபவம் இல்லாத ஸ்டாலின் ஏதும் பெருந்தவறு செய்துவிடாதிருக்கவும், நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் போது (cரிசிச் மனகெமென்ட்) சரியான முடிவுகள் எடுக்கவும், ஓரு கூட்டுத் தலைமை-அதாவது கூட்டணி ஆட்சி- உதவும்

தமிழகத்து அரசியல் தலைவர்களிடம் இந்த மனப்பக்குவம் இருக்கிறதென்று நீங்கள் கருதுகிறீர்களா??

// அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் கூட, 2001-04 ஆண்டுகளில் ஜெயலலிதா எடுத்த தீவிரத்தன்மை கொண்ட முடிவுகளைப் போன்ற முடிவுகளை எடுக்கவிடாமல் தடுத்து நிற்கும் ஒரு தடைக்கல்லாகவும் கூட்டணி ஆட்சி அமையும்

ஜெயலலிதா போன்ற தலைவர்களின் விருப்பத்தை தடுக்கவோ/ முடிவுகளை மாற்றவோ கூட்டணி கட்சிகளால் முடியுமென எனக்கு தோன்றவில்லை. (உதா: 13 மாத வாஜ்பாய் ஆட்சி)

மேலும் இது போன்ற தீவிர தன்மை முடிவுகளை மக்களே திருப்பி பெற வைக்கும் போது ( நாடளுமன்ற தேர்தல் தோல்வி) இன்னும் முதிர்ச்சி பெறாத கூட்டணி தத்துவம் தற்போது ஒத்து வராது என்பது என் கருத்து.

-- விக்னேஷ்
http://vicky.in/dhandora

1:39 AM  
Anonymous Anonymous said...

new ideas...

3:48 AM  
Blogger மாலன் said...

அன்புள்ள சசி,

தங்கள் எதிர்வினைக்கு நன்றி. என் கட்டுரையில் தெரிவித்துள்ள பல கருத்துக்களைத்தான் நீங்களும் எதிரொலித்திருக்கிறீர்கள்.மக்கள் ஒரே கட்சிக்கு வாக்களிப்பது மாறி வருகிறது என்றும், எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி வாக்களிக்காத சூழ்நிலையில் கூட்ட்ணி ஆட்சி ஏற்படுகிறது என்பதை (என் இரண்டாவது கட்டுரையிலும்)யும், திமுக இந்த முறை 130 தொகுதிகளில் போட்டியிடுகிறது அதிலும் 106 தொகுதிகளில் அதிமுகவோடு நேரடியாக மோதுகிறது எனவும், அதனால் அது தனித்து ஆட்சியமைப்பது கடினம் என்றும் என் கட்டுரையில் விளக்கமாகவே எழுதியிருக்கிறேன். அநேகமாக அதே கருத்துக்களை நீங்களும் உங்கள் கட்டுரையில் எதிரொலித்திருக்கிறீர்கள். அப்படியிருக்க இந்தத் தேர்தல் கூட்டணி ஆட்சி அமைவதற்கான துவக்கமாக இராது என்று எப்படிக் கருதுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. கூட்டணி ஆட்சி அமையாது என்பதற்கான உங்களின் premise என்ன வென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
மக்கள் எந்த தியரிப்படியும் வாக்களிப்பதில்லை என்பது உண்மைதான். அவர்கள் அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையில்தான் வாக்களிக்கிறார்கள். ஆனால் தியரிகள் அந்த யதார்த்தத்திலிருந்தான் பிறக்கின்றன. அவை முற்றிலுமான கற்பனாவாதம் அல்ல.

ந்டாளுமன்றத்திற்கு ஒரு மாதிரி, சட்டமன்றத்திற்கு வேறு ஒரு மாதிரி மக்கள் வாக்களிப்பதில்லை என்றால் 1980 தேர்தலில் மக்கள் நாடாளுமன்றத்திற்குக் காங்கிரசிற்கும், சட்டமன்றத்திற்கு அதன் எதிரணியில் இருந்த எம்.ஜி.ஆருக்கும் வாக்களித்தது ஏன்?

இந்தத் தேர்தலிலும் ஆச்சரியங்கள் இருக்கலாம் என்கிறீர்களே அது என்ன? அதிமுக கூட்டணிக்கு வெற்றி எனச் சில அறிவியல் ரீதியில் அமையாத கருத்துக் கணிப்புக்களை சில இதழ்கள் வெளியிட்டு வருகின்றன. அந்தக் கணிப்பின்படி அமையாது, திமுக அணி வெற்றி பெற்றால் அதை ஆச்சரியம் என்பீர்களா? கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகளைக் கூட்டி அதன் அடிப்படையில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்கிறார்கள் திமுக அபிமானிகள். அதை மீறி திமுக வென்றால் ஆச்சரியம் என்பீர்களா? அல்லது பாரம்பரியமாக திமுகவோ அதிமுகவோதான் ஜெயிக்கும் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றமும், சிறுபான்மை அரசோ அல்லது கூட்டணி அரசோ அமைந்தால் அதை ஆச்சரியம் என்பீர்க்ளா?
இந்த மூன்று விதமாகவும் இல்லாமல் முடிவுகள் வேறு விதமாக இருக்கவும் சாத்தியங்கள் உண்டா?

6:27 AM  
Blogger Srikanth Meenakshi said...

//சித்தாந்ததைக் காப்பாற்றும் அரசியல் என்பது போய் அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் என்ற நிலை ஏற்பட்ட போதே தார்மீகக் கேள்விகளுக்கு இடம் இல்லாது போய்விட்டது.//

Well said...

Thanks for the interesting perspectives and a very balanced article.

- Srikanth

9:51 AM  
Blogger Boston Bala said...

I have font issues in some of the Thisiagal pages like http://www.thisaigal.com/april06/tidbits.html

8:33 AM  
Blogger தமிழ் சசி | Tamil SASI said...

திரு.மாலன் அவர்களுக்கு,

உங்கள் கருத்துக்கு நன்றி

உங்களது கட்டுரையின் இரண்டாம் பகுதியான "கூட்டணி அரசை நான் எப்படி உருவாக்க முடியும்?" என்பதைத் தான் சாத்தியமில்லாத தியரி என்று நான் கூறினேன். கூட்டணி ஆட்சி இயல்பாகத் தான் உருவாக முடியும். வாக்களர்கள் கூடி உருவாக்கி விட முடியாது. இதனை காலத்திற்கேற்ப மாறும் பொருளாதார அரசியல் நிலைகள் தான் தீர்மானம் செய்கிறது.

என்னுடைய Premise குறித்து என்னுடைய பின்னூட்டத்தில் மேலோட்டமாக கூறியிருந்தேன்

ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் Vote swing, 2004 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. சுமார் 22.56% வாக்குகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இடம்மாறின. இது தான் தமிழகமெங்கும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தது. அது மட்டுமில்லாமல் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்கள் 1லட்சத்திற்கு மேல் தான் இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். இவ்வளவு வாக்குகள் திமுக கூட்டணிக்கு இடமாறியதன் காரணமாக அதிமுக தமிழகமெங்கும் வெகுசில சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதற்கு திமுக கூட்டணி பலம் ஒரு காரணம் என்றால் தமிழக அரசுக்கு எதிராக இருந்த Anti incumbency factor ஒரு முக்கிய காரணம்.
ஆக, திமுக இந்த தேர்தலில் தோல்வியடைய வேண்டுமானால் தன்னுடைய கூட்டணி ஓட்டுக்களில் திமுக 23% முதல் 24% இழக்க வேண்டும்.

இந்த Anti incumbency factor மொத்தமாக காணாமல் போய் விட்டது, ஜெயலலிதா அள்ளிக் கொடுத்த சலுகைகள் மக்களை அதிமுகவிற்கு சாதகமாக திருப்பி விட்டது போன்ற ஒரு பிம்பம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு ஆதரவாக சிறிது ஓட்டுக்கள் இடமாறலாம். ஆனால் திமுக -23% முதல் -24% ஓட்டுக்களை இழக்க எந்தவித காரணங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் ஓட்டுக்களில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. அதுவும் எதிர்கட்சியாக இருக்கும் ஒரு கட்சிக்கு மக்கள் மத்தியில் இயல்பாக ஆதரவு கூடியே இருந்து வந்திருக்கிறது. அரசின் மிதமிஞ்சிய செயல்பாடுகள் மட்டுமே மக்களை ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றும்.

ஆனால் ஜெயலலிதா சில சலுகைகளை பறித்து திரும்ப கொடுத்தார், சில சலுகைகள் கொடுத்தார் என்பதற்காக அவருக்கு ஆதரவான நிலை எடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிறிதளவு ஓட்டுக்கள் இடமாறாலாம் என்ற கோணத்திலேயே நான் இதனைப் பார்க்கிறேன்.

ஜெயலலிதா எடுத்த பல நடவடிக்கைகள் பொருளாதார பார்வையில் பாரட்டப்பட வேண்டியவை என்ற எண்ணமுடையவன் நான். ஆனால் அது அவருக்கு அரசியலில் தோல்வியையே ஏற்படுத்தும். பொருளாதாரச் சீர்திருத்தம் என்பது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களில் கைவைப்பதல்ல என்பது தான் இந்தியாவில் யதார்த்தமான அரசியல் நிலை. பாரதீய ஜனதா அரசு தோல்வியடைந்தது கூட இதனை உறுதிப்படுத்தியது. இதனைக் கடந்து ஒரு தனித்த பொருளாதார சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். மக்களுக்கு சலுகைகளையும் கொடுக்க வேண்டும் அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் அரசு கொடுக்கும் சலுகைகள் பாதிக்காத வண்ணம் கொண்டுச் செல்ல வேண்டும். இது தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய சவால்.

ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தன்னுடைய 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகளை விலக்கி கொண்டார். இதனால் அரசு ஊழியர்கள் மனம் மகிழ்ந்து இந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஓட்டுப்போடுவார்கள் என்று ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஞாபகமிருக்கும் அளவுக்கு அவர் திரும்பி வழங்கிய சலுகைகள் ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை. சிறுபான்மையினருக்கு அவரது மதமாற்றச் சட்டம் தான் ஞாபகத்தில் இருக்கும். இது போலவே அவரின் பல நடவடிக்கைகளைப் பார்க்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் வேறுபாடு தெரிகிறது. ஜெயந்திரரை கைது செய்த பொழுது ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரு விஷயம் மட்டும் இந்த வகையில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.

ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவர் வழங்கிய கவர்ச்சிகரமான பல திட்டங்களுக்கு ஈடுகொடுக்க தமிழகத்தின் ஆதி கால பிரச்சனையான அரிசி 2ரூபாயில் இருந்து இன்றைய நவீன கவர்ச்சியான கலர் டீவி வரை கருணாநிதி அறிவித்து இருக்கிறார். கருணாநிதியின் இந்த திட்டங்கள் ஓட்டுக்களைப் பெற்று கொடுக்க முடியுமா என்பதும் ஜெயலலிதா வழங்கிய சலுகைகள் ஓட்டுக்களை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறிகளே.

திமுகவின் கூட்டணி பலம், ஆளும்கட்சிக்கு எதிரான Anti incumbency factor, திமுகவிற்கு எதிராக பெருமளவில் இடம்மாற முடியாத அளவுக்கு (-23% முதல் -24%) இருக்க கூடிய கடந்த பாரளுமன்ற தேர்தல் vote swing போன்றவை திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே உள்ளது. இதன் அடிப்படையிலேயே கூட்டணி ஆட்சி இந்த தேர்தலில் சாத்தியம் தானா என்ற கேள்விக்குறியை எழுப்புகிறேன்.

இந்த தேர்தலில் ஊடகங்கள் எழுப்பும் பிம்பம் அதிமுக சார்பாகத் தான் இருக்கிறது. எனக்கு தமிழக கள நிலவரம் பத்திரிக்கைச் செய்திகளால் தான் தெரிகிறது. அதன் படி பார்த்தால் அதிமுக மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. என்னுடைய மேற்கண்ட கணிப்பு இந்த தோற்றத்திற்கு எதிராக இருப்பதால் தான் ஆச்சிரியங்கள் இருக்கும் என்று என் பதிவில் எழுதினேன்.

//
ந்டாளுமன்றத்திற்கு ஒரு மாதிரி, சட்டமன்றத்திற்கு வேறு ஒரு மாதிரி மக்கள் வாக்களிப்பதில்லை என்றால் 1980 தேர்தலில் மக்கள் நாடாளுமன்றத்திற்குக் காங்கிரசிற்கும், சட்டமன்றத்திற்கு அதன் எதிரணியில் இருந்த எம்.ஜி.ஆருக்கும் வாக்களித்தது ஏன்?
//

1980 தேர்தல் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது (அப்பொழுது எனக்கு 4வயது).
என்னுடைய தேர்தல் பதிவுகள் எல்லாமே நான் கவனித்த விஷயங்கள், அதனால் நான் வளர்த்துக் கொண்ட எண்ணங்களின் பதிவுகள் தான். நான் அருகில் இருந்து கவனித்த வந்த மக்களின் இயல்புகளை தான் பதிவுகளாக எழுதியிருக்கிறேன்.

1989க்குப் பிறகு நான் கவனித்த வந்த தேர்தல்களில் இவ்வாறான போக்கு இல்லை என்று நான் நிச்சயமாக சொல்ல முடியும். நீங்கள் கூறுவது போல 1980ல் மட்டுமே அது நடந்திருந்தால் அதனை ஒரு விதிவிலக்காக மட்டுமே பார்க்க வேண்டும்.

மாநிலத்தைச் சார்ந்த தங்கள் பிரச்சனைகளை ஒட்டியே மக்கள் வாக்களிக்கிறார்கள். இது தான் மக்களின் இயல்பாகவும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் பின்னூட்டத்தில் உள்ள சில கருத்துக்களை தனிப்பதிவாகவும் பதிவு செய்கிறேன்

http://thamizhsasi.blogspot.com/2006/04/blog-post_04.html

4:57 PM  
Blogger Thisaigal said...

பாலா, "புள்ளிவிவரங்கள்" பக்கத்தில் இப்போது எழுத்துரு பிரச்சனையை சரிசெய்துவிட்டேன். தெரிகிறதா என்று பாருங்கள். குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.

அருணா

12:04 AM  
Blogger சந்திப்பு said...

மாலன் தங்கள் கருத்தை முதலில் ஏற்றுக் கொள்கிறேன்.
அதிமுக - திமுக இரண்டு பேரின் ஆட்சிகளும் எந்த அடிப்படை மாற்றத்தையும் தமிழகத்தில் கொண்டு வரவில்லை. கொள்கை அடிப்படையில் இரண்டு பேரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்.
இவர்கள் கொள்கை (மொழி, இனம்...) என்று பேசுவது கூட, தங்கள் அரசியல் - அதிகார நலன் சார்ந்த தவிர வேறில்லை.
உதாரணமாக, மேற்குவங்கத்தில் சி.பி.எம். தனித்து முழு மெஜாரிட்டியோடு ஆட்சியைப் பிடிக்கும் சூழல் இருந்தாலும், அங்கே ஆரம்பம் முதல் தனிக்கட்சி ஆட்சி என்பது இல்லை. கூட்டணி ஆட்சிதான். அதேபோல்தான் கேரளாவிலும் இடது முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே இந்தியாவிலேயே மேற்குவங்க மாநிலத்தில் 27 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவதோடு மக்களின் வாழ்க்கை தரத்திலும் அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். (நிலச் சீர்திருத்தம், தொழிலாளர் நலன் பாதுகாப்பு, கல்வி...)
எனவே தாங்கள் கூறியுள்ளது போல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி என்ற இலக்கை நோக்கி நமது வாக்காளர்கள் பயணிப்பது நல்லது. இந்த கருத்தை வலுப்படுத்திட வேண்டியிருக்கிறது. அதே சமயம் இங்கே காங்கிரசு கூட்டணி என்று கூச்சல் போடுவது வெறும் அதிகாரப் பகிர்வுக்காக என்பதையும் நாம் மறந்திட முடியாது.
எனவே கூட்டணி ஆட்சி என்பதிலும் குறைந்தபட்சம் ஒத்த கருத்துடைய கட்சிகளின் கூட்டணி ஆட்சியாக அது மலர்ந்திட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

4:18 AM  
Anonymous Anonymous said...

israel pOnRa nAdugaL kadaippidikkum
vigidhAchara prathinidhithuvam ingum vandhAl kUttani Atchi ERpada nalla vAippu uLLadhu. angu 30 katchigaL, avaRRuL 3 kaNisamAna vAkkugaL peRRum perumbAnmai peRa mudiyAmal kUttaNi Atchi amaikkinRana.
rA. narasimman

8:46 AM  
Blogger சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

மாலனி கட்டுரை,
நல்ல முறையில் அலசப்பட்டுள்ளது.
தமிழ்சசியின் பதிலும் மிக அருமை.
மக்களும் தமக்கு இலவசங்கள்/சலுககைகள் மட்டும் வேண்டும் என்னும்போது அரசியல் கட்சிகளையைப் பற்றி மட்டும் குறை சொல்லி என்ன பயன்.

11:57 AM  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

அருமையான அலசல். பின்னூட்டங்களின் மூலம் சுவையான விவாதம்.

கட்சிசார வாக்காளர்களில் முன்று வகையினரை நான் காண்கிறேன்.

ஒன்று, அனைத்துக் கட்சிகளின் மீதும் நம்மிக்கையிழந்தாற்போல் 'அத்தனை அரசியல்வாதிகளையும் ஒண்ணாக்கட்டி, செருப்பால அடிக்கணுமய்யா' என்று punch கொடுக்கும் சாமானிய மக்கள். யாருக்கு ஓட்டுப் போடுகிறோமென்பதை யாரிடமும் எந்தசூழலிலும் வெளியிட விரும்பாத நடுத்தர வர்கத்தினர்.

இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் மேல் அதன் கொள்கைகளுக்காக செயல்திட்டங்களுக்காக `இவர்கள் நம் சமூகத்திற்கு எதிரி. இவர்கள் ஆட்சிக்கு வரவேகூடாது' என்ற எண்ணம் கொண்டு அக்கட்சியினை வெல்லும் திறந்வாய்ந்த கட்சிக்கு, மற்ற விஷயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஓட்டுப்போடுபவர். சமுதாயத்தில், upper, middle, lower என எல்லாவகுப்பிலும் பரலாகக் காணப்படுபவர்கள்.

மூன்றாவதாக, "எனக்கு இதுலயெல்லாம் 'interest' இல்லை ஸார்" என ஒதுங்குபவர்கள். `நம்ம நண்பர் சொன்னாரு, சொந்தக்காரர் சொன்னாரு' அதனால் அவருக்குப் போட்டேன் என்பார்கள். விஜயகாந்தின் கட்சிப்பெயரைத் தெரியாதவர்கள்; BJPலயா இருக்காரு திருநாவுக்கரசு என்று கேட்பவர்கள்..

இப்படிப்பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். Exit pollல் யாருக்குப் போடுவதாகச் சொன்னார்களோ, அவர்களுக்குப் போடாமல், மற்றகட்சிக்கு வாக்களிக்கும் நம் ஜனநாயக மன்னர்கள் நிறையபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.

11:46 AM  

Post a Comment

<< Home

Saturday, April 01, 2006

ஏப்ரல் மாத திசைகள்

வரும் மே மாதம் 8 ந் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல். பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ள தமிழக அரசியல் களம் இன்று தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் சொல்லலாம். இந்த நிலையில் இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும்? ஏதேனும் ஒரு கட்சி பெரும்பான்மைப் பெற வாய்ப்புள்ளதா? அல்லது பல கட்சிக் கூட்டணி முதன் முறையாக இங்கு அவதாரம் எடுக்குமா? அப்படியென்றால் எந்த மாதிரிக் கூட்டணி? கொள்கை அடிப்படையிலா அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றிணைக்கப் பட்டு பின்னர் ஆட்டம் காணும் தொத்தல் கூட்டணியா?

பலக் கேள்விகளை ஏப்ரல் மாத திசைகளின் எழுத்தாளர்களின் முன் வைத்தோம். கூட்டணி ஆட்சி வருவது தமிழ் நாட்டுக்கு நல்லது என்று கூறும் நமது கௌரவ ஆசிரியர் மாலன், எப்படி ஓட்டுப் போடலாம் என்று விவரிக்கிறார். கணியனின், கணிப்பல்ல, கருத்து என்ற கட்டுரை, இந்த தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என்று தனித்தனியே ஒரு SWOT அலசல் செய்கிறது. மக்கள் யார் பக்கம் என்று கேள்வியை எழுப்பி அலசுகிறார் பத்திரிகையாளர் ராம்கி.

பெண்கள் அரசியலிலிருந்து ஒதுங்குகிறார்களா அல்லது அவர்களுக்கு வாய்ப்பளிக்க நம் அரசியல்வாதிகள் தயங்குகிறார்களா என்று ஆராய்வது அருணா ஸ்ரீனிவாசன். அமெரிக்காவிலிருந்து பாஸ்டன் பாலா தன் மந்திரக்கண்ணாடியில் துல்லியமாகவே தேர்தல் வானைப் பார்த்து அலசி தன் விருப்பம் என்ன என்பதை விரிவாக சொல்கிறார்.கூட்டணி ஆட்சி முதல் முறையாக வர வாய்ப்புள்ளது என்று கூறுவது ஏ. ஜகதீசன், ஓய்வு பெற்ற மத்திய அரசு உளவு இலாகா அதிகாரி; இன்றைய அரசியலை ஒரு தேசீய அக்கறையுடன் கவனித்து வருபவர்.

கூட்டணிகளின் கூட்டல் கழித்தல்களைத் தொகுதி வாரியாக விரிவாக அலசும் புருஷோத்தமன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இன்னும் ஒரு தேர்தல் தேவை என்கிறார்.

மற்றபடி, இந்த இதழில் மாலனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து தேர்தல் கருத்து வெளிப்படும் சிறுகதை ஒன்றும், சரவணின் சிறுகதை ஒன்றும் இடம் பெறுகிறது.கவிதைகள் பகுதியை அலங்கரிப்பவர்கள், வாணி ஜோசப், கீதா, மதுமிதா, சிங் செயகுமார், மற்றும் கவிநயா.இவர்களுடன், கொரியாவிலிருந்து, குரலுடன் கூடிய மின்னஞ்சல் பற்றி கண்ணனும், சினிமா பகுதியில் கேரளாவின் எம் டி வாசுதேவன் நாயரின் படங்கள் பற்றிய கட்டுரையுடன் சுப்பிரபாரதி மணியனும் கலந்து கொள்கிறார்கள். இந்த இதழிலிருந்து இரண்டு புதிய பகுதிகள். " அண்டை, அயல் " பகுதியில் இதர மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகள் இடம் பெறும். இந்த இதழில் ஆங்கில நாவலாசிரியர் ஓ ஹென்றியின் கதை ஒன்றை பவித்ரா ஸ்ரீனிவாசன் மொழிபெயர்க்கிறார்."வாழ்க்கை" என்ற பகுதியில் கலை, இசை மற்றும் வாழ்க்கையின் இதர மென்மையான அம்சங்களைப் பற்றியக் கட்டுரைகள், மற்றும் பல்வேறு துறைகளில் வல்லுனர்களின் நேர்காணல்கள் இடம் பெறும். இந்த இதழில், கீத கோவிந்தம் கவிதைகளின் அடிப்படையில் அமைந்த ஓவியங்களைப் பற்றி கட்டுரை எழுதியுள்ளார் அரவக்கோன். இந்த இதழின் போதி மர சிந்தனையை அளிப்பவர் வேதாத்ரி மகரிஷி.தமிழகத்திற்கு வெளியே அயல் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மேம்பாட்டுக்கு அரசியல் ரீதியாக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த இரு தமிழர்கள் சமீபத்தில் மறைந்தார்கள். ஒருவர், இலங்கையில் போராளியாக வாழ்வைத் துவக்கிய, எழுத்தாளர் சீதாம்பரி புஷ்பராஜா. இன்னொருவர், சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் துணைப்பிரமருமான சின்னத்தம்பி ராஜரத்தினம். இருவரின் மறைவுக்கும் திசைகள் அஞ்சலி செலுத்துகிறது.

திசைகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி வாசகர்களும், எழுத்தாளர்களும் கலந்துரையாட இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. திசைகளின் இடது பக்கம் இதன் சுட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டியைச் சொடுக்கி உங்கள் எண்ணங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கடைசியில் மறந்துவிடாமல், பெனாத்தல் சுரேஷ், திசைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைத்துக்கொடுத்துள்ள கருத்துக் கணிப்பு பெட்டியில் உங்கள் ஊகங்களின் முடிவுகளையும் ஆராய்ந்து பாருங்கள். யார் கண்டார்கள்? உங்கள் ஊகங்கள் உண்மையாக இருக்குமோ என்னவோ!!


அன்புடன்
அருணா ஸ்ரீனிவாசன்

1 Comments:

Anonymous Anonymous said...

I read with Interest Mr.A Jegadeesan's article as a former collegue and a dear friend.Vaiko has to leave DMK because it had no space for an independent thinking politician apart from the family of Mr.karunanidhi.It was a bitterpill when he has to join karunanidhi again for survival.But 19 months incaceration under POTA is not enough for vengence and loss his face means Vaiko has to obey the dictates of his masters who are the NRI tamils who fund him.I also found that vijayakanth will get 10% of the younger voter's ballot rather on the heigher side.for me karunanidhi is the problem for DMK as the people are intelligent and the woman voter is overwhlmingly for ADMK as jayalalitha has rectified her own mistakes.the government servants and their families who have sufferred also will decide in its own way some marginal consituencies.After Karnanidhi who?People see the face of stalin with not much hope.After jayalalitha who?there is noface which one can think of.There is no innerparty democracy in ADMK.But i think she has given an administration which will decide marginally in her favour.

5:17 AM  

Post a Comment

<< Home