Wednesday, April 05, 2006

திமுகவின் தனி ஆட்சிக்கு வாய்ப்பில்லை

தமிழ் சசி என்னுடைய பதிவிலிட்ட பின்னூட்டத்திலும், அவரது பதிவிலும், திமுக கூட்டணி வெற்றி பெறும் என அவர் கருதுவதின் அடிப்படையாக சில கணக்குகளையும், வாதங்களையும் தந்துள்ளார்.

அவற்றில் ஒன்று:

"ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் Vote swing, 2004 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. சுமார் 22.56% வாக்குகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இடம்மாறின. இது தான் தமிழகமெங்கும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தது..... திமுக இந்த தேர்தலில் தோல்வியடைய வேண்டுமானால் தன்னுடைய கூட்டணி ஓட்டுக்களில் திமுக 23% முதல் 24% இழக்க வேண்டும்."

இது குறித்து யோசிக்க்கும் போது சில கேள்விகள் எழுகின்றன.

அ. 22.56% வாக்குகள் இடம் மாறின என்பதன் அடிப்படை என்ன?
2001ல் அதிமுக பெற்ற வாக்குகள், 2004ல் அதிமுக பெற்ற வாக்குகள் இவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தைத்தான் 'இடம் மாறின' என்று சசி குறிப்பிடுகிறார் என்றால் அவர் கீழ்க்காணும் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.2004ல் அதிமுகவிற்கு எதிரான அலை இருந்தது. இன்று இல்லை.
2.2004ல் திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் 2001ல் அதிமுக கூட்டணியில் இருந்தன. எனவே 2001ல் அதிமுக பெற்ற வாக்குகளில் கூட்டணிக் கட்சியினர் பெற்ற வாக்குகளும் அடங்கும்.

எனவே இடம் மாறிய வாக்குகளை துல்லியமாகக் கணக்கிட முடியாது.

ஆ.2001ல் அதிமுகவுடன் இருந்த கட்சிகள் இன்று திமுகவுடன் இருக்கின்றன.அதனால் அநதக் கட்சிகளின் பலம் திமுகவிற்கு சேரும்தானே? என்று கேட்டால், ஆம், சேரும், ஆனால் எவ்வளவு சேரும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ம.க. அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போது அதிமுக பெற்ற வாக்குகள் 25.89%. அதே 2001 தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்தான் பாமக இருந்தது. அப்போது அதிமுக பெற்ற வாக்குகள் 31.44 சதவீதம். இதைக் கொண்டு அதிமுகவிற்குக் கூட்டணியால் கிடைத்த பலன், கூடுதலாக ஆறு சத்வீத வாக்குகள் என்று சொல்லிவிட முடியுமா? முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட போது, அதற்கு எதிரான அலை வீசிய காலகட்டத்தில் கூட அது பெற்ற வாக்குகள் 29.77 சதவீதம். அதாவது கூட்டணி இல்லாத போதும், எதிராக அலை வீசிய போதும் அதிமுக 2004ல், இழந்தது சுமார் 1.5 சதவீத வாக்குகளைத்தான்.

இ. உண்மையில் தமிழ் நாட்டில் swingஐ சரியாகக் கணக்கிட முடியாது. ஏனென்றால் அலைகள் இல்லாத தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் swingகள்தான் ஓரளவிற்கு சரியான கணிப்பைக் கொடுக்கும். ஆனால் த்மிழ்நாட்டில்,1998, 2001 தேர்தலைத் தவிர அண்மைக்காலங்களில் அலை இல்லாத தேர்தலே இல்லை.
1991 ராஜீவ் படுகொலை அலை, 1996 ஜெயலலிதா எதிர்ப்பு அலை,1999 வாஜ்பாய் அனுதாப அலை, 2004 ஜெயலலிதா எதிர்ப்பு அலை.
ஈ. கட்சிகளின் பலத்தைக் கொண்டு கணக்கிடும் IOU (index of opposition unity) முறையும் பலன் தராது. ஏனெனில் கட்சிகள் அணிமாறிக் கொண்டே இருக்கின்றன.

எனவே swing, IOU ஆகியவற்றைக் கொண்ட கணக்குகள் சரியாக வராது.

உ:" ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தன்னுடைய 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகளை விலக்கி கொண்டார். இதனால் அரசு ஊழியர்கள் மனம் மகிழ்ந்து இந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஓட்டுப்போடுவார்கள் என்று ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஞாபகமிருக்கும் அளவுக்கு அவர் திரும்பி வழங்கிய சலுகைகள் ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை. சிறுபான்மையினருக்கு அவரது மதமாற்றச் சட்டம் தான் ஞாபகத்தில் இருக்கும்"
இது சசியின் ஊகம். ஆனால் திமுக பேச்சாளர்கள் கூட்டத்தில், அவர்கள் வியூகம் எப்படி இருக்க வேண்டும் என கருணாநிதி பேசியது இது: "2004 தேர்தலின் போது நாம் எடுத்துச் சொல்லாமலே மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் பற்றி ஒரு கருத்து இருந்தது. ஆனால் இப்போது நாம் அவர்களுக்கு அரசின் தவறுகளை ஞாபகப்படுத்த வேண்டும். அதன் கொடுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்"

இதுதான் இன்றுள்ள யதார்த்தம்.

2004 தேர்தலுக்குப் பின் வேறு சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன:

1. தயாநிதி, அன்புமணி, வாசன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது. இது இந்தக் கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன என்ற எண்ணத்தைப் பரவலாகவும், கட்சிக்காரர்களிடத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது.

2.வைகோவின் விலகல்- பிரசாரம்.

3.விஜயகாந்தின் பிரவேசம்

4.அதிமுகவிற்குக் கிடைத்திருக்கும் ஊடக ஆதரவு
6.கருணாநிதியின் உடல்நிலை, வயது. அடுத்த முதல்வர் கருணாநிதியா, ஸ்டாலினா என்ற கேள்வி முன் வைக்கப்படுமானால் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக இராது.

7.திமுகவின் Strategyயில் உள்ள குறைபாடு. அது 130 இடங்களில் போட்டியிடுகிறது. தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.அதாவது அது போட்டியிடும் இடங்களில் 90 சதவீத இடங்களை வெல்ல வேண்டும். அலை இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த 130 இடங்களில் 25 சதவீதம் தென்மாவட்டங்களில் இருக்கின்றன என்பதயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதுவும் தவிர இந்த 130ல், 106 இடங்களில் அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது திமுக தனித்து ஆட்சி அமைப்பது என்பது எளிதல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.
*

2 Comments:

Blogger ஜெ. ராம்கி said...

//அலைகள் இல்லாத தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் swingகள்தான் ஓரளவிற்கு சரியான கணிப்பைக் கொடுக்கும். ஆனால் த்மிழ்நாட்டில்,1998, 2001 தேர்தலைத் தவிர அண்மைக்காலங்களில் அலை இல்லாத தேர்தலே இல்லை.//

In 1998 itself, there was a wave against ruling party especially after Coimbatore Bomb-blast.Hence, we can take it account only two elections ie 1989 & 2001 in the last 25 years of politics

1:51 AM  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

(1) தி.மு.கழகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து கலைஞர் முதல்வரானாலும், தனிப்பெருங்கட்சியாக அ.தி.மு.க. உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அம்மாதிரியான சூழலில், காங்கிரஸின் கரமும் ஓங்கும், பாமகவின் பிடியும் இறுகும்.

(2) அதேபோல, தொங்கு சட்டசபை உருவாகும் சூழலில், அ.தி.மு.க. தனிப்பெருங்கட்சியாக வந்தால், பாமகவும், காங்கிரஸும் தீர்மானிக்கும் சக்திகாளாக (அதாவது, இடப்பெயர்ச்சிக்குத் தாயாராக) உருவெடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேற்சொன்ன (1) மற்றும் (2) போல நடந்தால், காலப்போக்கில், நல்லதோ, கெட்டதோ, கூட்டணியாட்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல சிறு கட்சிகளின் மவுசு பெரியகட்சிகளிடத்தே அதிகரிக்கும்.

11:18 AM  

Post a Comment

<< Home